வரும் 2008ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் சௌதி ஹஜ் அமைச்சர் டாக்டர். ஃபுவாத் அல்ஃபார்சியுடன் கையெழுத்தான பின் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹமத் அவர்கள் செய்தியாளர்களிடம்விளக்கினார்.
இவ்வாண்டு 1,57,000 யாத்திரிகர்கள் ஹஜ் செய்வதற்காக சௌதிஅரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும், கூடுதலாக 15,000 யாத்திரிகர்களுக்காக அனுமதி கோரியிருப்பதாகவும் அதற்கு அநேகமாக ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒப்புதல் கிடைத்திருக்கும் 1,57,000 பேரில் ஹஜ் கமிட்டி மூலம் 1,10,000 யாத்திரிகர் வருவர் என்றும் மீதிஇடங்கள் தனியார முகவர் மூலம் வருபவர்க்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மெக்காவின் புனிதப்பள்ளி விரிவாக்கப் பணியின் காரணமாக அதைச் சுற்றிலும் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கப்படுவதால் யாத்திரிகர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்கள் இவ்வாண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
புனிதப்பள்ளியிலிருந்து 1கி.மீ. சுற்றளவில் கிடைக்கும் இருப்பிடங்கள் ‘பச்சை’ வகைப் பகுதி என்றும், 1 முதல் 6கி.மீ. சுற்றளவில் இருக்கும் பகுதிகள் வெள்ளை’ வகைப் பகுதி என்றும், மூன்றாவது வகைப் பகுதி ‘அசிசியா’ பகுதி என்றும் குறிப்பிடப்படும். இதில் பச்சைவகைப் பகுதிக்கு யாத்திரிகரிடமிருந்து 3,000 ரியாலும், வெள்ளைவகைப் பகுதிக்கு 2,200 ரியாலும், அசிசியா பகுதிக்கு 1,500 ரியாலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தரமான இருப்பிடங்களைப் பெறுவதற்காக இந்திய ஹஜ் குழுமம் தெற்காசிய மொஸஸாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி ஹஜ் கமிட்டி மூலம் வரும் அனைத்து யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்களும் ஹஜ் யாத்திரையின் எல்லைகளுக்கு உட்பட்டிருக்கும்.
கடந்த ஆண்டு இருந்த குறைபாடுகள் முழுமையாய் களையும் விதத்தில் இவ்வாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
Source : satrumun
No comments:
Post a Comment