கடந்த சில நாள்களாக வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 50 கோடி ரூபாய்க்குமேலாக சுருட்டிய ஒரு நிறுவனத்தின் பெயர் ஏடுகளில் அடிபட்டுக் கொண்டு இருக்கிறது.
தங்கக் காசு மோசடிச் செய்தி இன்னொரு பக்கம்!
சென்னை அண்ணா நகர், நெற்குன்றம் உள்பட அய்ந்து இடங்களில் விஸ்ப்ரோ டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் அலுவலகங்களைத் திறந்து ஒரு மோசடித் தொழிலை நடத்தியுள்ளனர்.
ஜாவா புரோகிராமர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடமிருந்து பெருந்தொகையைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இந்த மோசடியில் சிக்கியவர்கள் படித்தவர்கள் - அதில் ஒருவர் இராணுவத்தில் கேப்டனாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவராம்.
ஆயிரக்கணக்கில் புகார்கள் குவிந்த நிலையில், இந்த வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.படித்தவர்கள் இப்படி மோசடி வேலைகளில் ஈடுபடுவதும், படித்தவர்கள் இத்தகு மோசடிப் பேர்வழிகளை நம்பி ஏமாறுவதும் நம் நாட்டுப் படிப்பின் தகுதியை எடை போடுவதாக அமைகிறது.
ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று கூறப்படுவது உண்டு. என்றாலும், இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்துபற்றிச் சிந்திப்பதும், செயலாக்கங்களை உருவாக்குவதும் அவசியமாகும்.
ஒரு நிறுவனத்தை உருவாக்குவது, நடத்துவது என்றால், அதற்குமுன் அதன் நம்பகத் தன்மைக்கான உத்தரவாதங்கள் இருந்து தீரவேண்டும்; அதற்குச் சட்ட ரீதியாக சில ஏற்பாடுகளைச் செய்வதுபற்றி அரசு யோசிக்கலாம்.
உலகியல்பற்றி தெரிந்துகொள்ளாத வெறும் காகிதப் படிப்புப் பட்டதாரிகளைத்தான் நம் நாட்டுக் கல்வி நிறுவனங்கள் உற்பத்தி செய்து ஆண்டுதோறும் இலட்சக்கணக்கானவர்களை அனுப்பிக் கொண்டு இருக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டாகும்.
பாடத் திட்டத்தில்கூட விழிப்புணர்வு தொடர்பான பகுதிகள் இருக்க வேண்டும் என்பதை இந்த மோசடிச் சம்பவம் வலியுறுத்துகிறது.ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் பட்டதாரிகள் வெளியே வந்துகொண்டு இருக்கிறார்கள்.
வேலை வாய்ப்பைத் தேடி அலைந்து திரிகிறார்கள். இந்தச் சூழலை மோசடிப் பேர்வழிகள் நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். கடன் வாங்கிக் கல்வி கற்றுப் பட்டமும் பெற்றவர்கள் வேலைகளைப் பெறுவதற்காகவும், கடனை வாங்கிச் செலுத்தி, எப்படியாவது வேலை கிடைத்தால் சரி என்கிற வெறியில் கருத்தை இழந்தவர்கள் ஆகிறார்கள்.
மோசடிக்காரர்களை விரைவில் பிடித்து சட்டத்தின்முன் நிறுத்தி, கடுமையான தண்டனைகளை வாங்கிக் கொடுப்பதன்மூலம் - அத்தகைய செய்திகள் மக்கள் மத்தியில் பெரும் அளவுக்குப் பரவுவதன்மூலமே, வேலைத் தேடி அலையும் இளைஞர்கள் மத்தியிலே எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்த முடியும்.
மோசடிக்காரர்கள் தம் கையில் சிக்கிக்கொண்டு இருக்கிற பெரும் பணத்தின்மூலம் சட்டத்தின் சந்து, பொந்துகளில் இலகுவாக நுழைந்து தப்பிக்க முயற்சிப்பார்கள். பணம்தான் பாதாளம் வரை பாயும் என்று வேறு சொல்லி வைத்துள்ளனர். இதற்கு இடம்தராமல் காவல்துறை நடந்துகொள்ளவேண்டும்.
பல்கலைக் கழகங்களேகூட போலியாக நடக்கின்றன என்று அத்தகுப் பல்கலைக் கழகங்களின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியாகின்றன. அந்தப் பல்கலைக் கழகங்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை?
சில குறிப்பிட்ட மோசடிப் பல்கலைக் கழகங்களின் பெயர்கள் ஆண்டுதோறும் வெளிவரவும் செய்கின்றன.அது எப்படி முடிகிறது என்று தெரியவில்லை.
நமது சட்டத்தில் ஏதோ ஓட்டை இருக்கிறது; நடைமுறைக் கண்ணோட்டம் இல்லாத ஏட்டுச் சுரைக்காயாக உள்ளன என்றே நினைக்கத் தோன்றுகிறது.
இவற்றையெல்லாம் அடைத்து, குற்றம் செய்பவர்கள் தப்பிக்கவிடப்படாமல் தக்க தண்டனைகளைப் பெறச் செய்வதன் மூலமாகத்தான் மோசடிகளைத் தடுக்கவும், ஏமாறுபவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடியும்.அரசுகள் சிந்திக்குமாக!
Saturday, May 31, 2008
படித்தவர்கள் செய்யும் மோசடிகள்!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.
இதில் படித்தவர்களுக்கு ஏமாற்றும் வாய்ப்பு அதிகம்.
கொடுமை என்னவென்றால், ஜாவா 'படித்தவர்கள்
கூட ஏமாந்து போனது தான். இவர்களை எதில் சேர்ப்பது
என்று தெரியவில்லை.
Post a Comment