இந்திய அரங்கில் சுவிஸ் வங்கி பற்றியும், கருப்புப்பணம் பற்றியும் அவ்வப்போது பேசப்படுவதுண்டு, அந்த வேகத்திலேயே மறக்கப்படுவதுமுண்டு. இந்த முறை தேர்தலோடு இணைந்து வந்திருப்பதால் கொஞ்சம் பரபரப்பு ஏறிவிட்டிருக்கிறது. நாட்டின் மொத்த மக்கட்தொகையில் சற்றேறக்குறைய பாதி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள ஒரு நாட்டின் (வறுமைக்கோடு என்பதே ஒரு ஏமாற்றுப்புள்ளிவிபரம் என்பது வேறு விசயம்), கடந்த பத்து வருடங்களில் மட்டும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட ஒரு நாட்டின், எழுபது கோடி பேர் ஒரு நாளை இருபது ரூபாய் வருமானத்தைக்கொண்டு கழித்துக்கொண்டிருக்கும் ஒரு நாட்டின் அயோக்கிய அதிகாரவர்க்கமும், ஓட்டுப்பொருக்கி அரசியல் வாதிகளும், இரக்கமற்ற முதலாளிகளும் திரையுலக கழிசடைகளும், விளையாட்டிற்கு தேசியச்சாயம் பூசும் கிரிக்கெட்டவர்களும் பதுக்கிவைத்திருக்கும் கணக்கில் வராத கள்ளப்பணம் மட்டுமே 64 லட்சம் கோடி என்றால் வறுமையில் உழலும் மக்கள் தங்களின் வறுமைக்கு காரணம் தலை எழுத்து, கடவுள் விதித்தது என நம்பிக்கொண்டிருப்பது எவ்வளவு பரிதாபகரமானது. மக்களை வதைத்துக்கொண்டிருக்கும் உலக வங்கி, உலக வர்த்தகக்கழக சட்டங்கலெல்லாம் கடனின் வழியாகத்தான் இந்தியாவுக்குள் நுழைந்தன. நலத்திட்டங்களின் பெயரில் வாங்கப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட இந்தியாவின் மொத்தக்கடன் 4.87 லட்சம் கோடிதான். ஆனால் சுவிஸ் வங்கிகளில் சிலர் மறைத்துவைத்திருக்கும் பணம் மொத்தககடனை விட 13 மடங்கு அதிகம். இப்படி இந்தியாவின் பணம் மட்டுமல்ல உலகின் அனைத்து நாடுகளிலுமுள்ள முறைகேடான பனம் சுவிஸ் வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ளது. சற்றேறக்குறைய முந்நூறு ஆன்டுகளாக முறைகேடாக வரிஏய்ப்பு செய்த பணத்தை காப்பாற்றிக்கொடுக்கும் வேலையை செய்துவருகிறது. தெளிவாகச்சொன்னால் முதலாளியம் அரும்பத்தொடங்கிய காலகட்டத்தில் அந்த இலக்கணத்தின்படி உருவானது தான் இந்த சேவை. இந்த வங்கியில் போடப்படும் பணம் யாருடையது என்பதை இவ்வங்கிகள் வெளியிடாமல் ரகசியம் காக்கின்றன. இடையில் ஹிட்லர் யூதர்களை வேட்டையாடியபோது அவர்களின் பணம் ஹிட்லரின் கைகளில் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த வங்கிகளின் சட்டவிதிகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. ஆனால் இப்போதோ நிலமைகள் மாறுகின்றன. முதலாளித்துவ நெருக்கடிகளால் உள்ளுக்குள் நொருங்கிக்கொண்டிருக்கும் வளர்ந்த நாடுகளின் பார்வை இந்த சுவிஸ் வங்கிகளின் மேல் திரும்பியிருக்கிறது. இந்த நாடுகளின் நிர்ப்பந்தங்களால் சுவிஸ் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் விபரங்களை வெளியிட முன்வந்திருக்கின்றன, ஒரு நிபந்தனையுடன். அந்தந்த நாடுகளின் அரசுகள் தான் இதனை கேட்டுப்பெற முடியும். அப்படி வெளியில் கசிந்த விபரங்களின் படிதான் உலகின் வேறெந்த நாடும் நெருங்க முடியாதபடி இந்தியர்கள் குவித்துவைத்திருக்கும் பணம் உச்சத்தில் இருக்கிறது. அரசு இந்திய வாடிக்கையாளர்களைப்பற்றிய விபரங்களை கேட்டுப்பெற முடியும் என்றான பின்னும் இந்திய அரசு இந்த கள்ளப்பணத்தைப்பற்றி கள்ள மௌனம் சாதிக்கிறது. பிஜேபி இதைப்பற்றி பேசுகிறது என்பதால் அது ஆட்சிக்கு வந்தால் இந்தப்பணத்தை கொண்டுவந்துவிடும் என்றோ விபரங்களை வெளியிடும் என்றோ எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் எல்லா ஓட்டுக்கட்சிகளும் விதிவிலக்கின்றி இந்தப்பட்டியலில் வரும் என்பதில் ஐயமொன்றுமில்லை. 2003,2007 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மோடி ரகசியமாக சுவிஸ் சென்று வந்திருக்கிறார். இந்தியாவுக்கான சுவிஸ் தூதர் பிலிப், “இந்தியாவிடமிருந்து இதுவரை எந்தக்கோரிக்கையும் வரவில்லை. வந்தால் சுவிஸ் வங்கிச்சட்டங்களின்படி நடவடிக்கைகள் தொடங்கும்” என்று கூறியிருக்கிறார். ஓட்டுக்கட்சிகள் அந்த விபரங்களை கேட்டுப்பெறக்கூடும், பெற்ற விபரங்களைக்கொண்டு பேரங்கள் நடைபெறும். பல்வேறு விதமாக ஏற்கனவே ஏமாற்றப்பட்ட நாம் இந்த விசயத்திலும் ஏமாற்றப்படுவோம். முறைகேடாக பணம்சேர்த்தவர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு அதைக்கொண்டு அரசியல் பேரங்களை நடத்திமுடித்து தங்களின் கரையான வரலாற்றை மறைத்துக்கொண்டு உங்களிடம் வாக்குக்கேட்டு வருவார்கள், ஜனநாயகக்கடமையை நமக்கு நினைவூட்டிக்கொண்டு. என்ன செய்வதாய் உத்தேசம்? இப்போதெல்லம் எருமைச்சாணம் கிடைப்பதில்லை என்றாலும் தேடி சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளுங்கள். அவசியமிருக்கிறது.
நன்றி : தமிழ்வட்டம்
Sunday, May 10, 2009
வறுமை தலையெழுத்துமல்ல, கருப்புப்பணம் தனியுரிமையுமல்ல….
போலிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் சுவிஸ் வங்கிகளில் குவிக்கப்பட்டிருக்கும் இந்திய கருப்புப்பணத்தை மீட்டுக்கொண்டுவருவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து அத்வானியும் ந நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீட்டுக்கொண்டுவருவோம் என அருளியிருக்கிறார். பெருமுதலாளிகளின் பணம் சொத்துகள் நட்ட ஈடின்றி பறிமுதல் செய்யப்படும் என கம்யூனிசம் கூறும் போது அநியாயம், உழைத்து சேர்த்த சொத்து, தனிமனித உறிமை மீறல் என்றெல்லாம் பேசுபவர்கள் இன்று சுவிஸ் வங்கிகளில் போடப்பட்டிருக்கும் பணத்தை இந்தியா கொண்டுவரவேண்டும் என்கிறார்கள். இது சுதந்திர வர்த்தக காலம், இங்கு அரசின் தலையீடு கூடாது என வேதம் ஓதியவர்கள், நிறுவனங்கள் திவாலாகும் நிலை வந்ததும் அரசு பணத்தை கொண்டு எங்களை மீட்கவேண்டும் என்றதைப்போல. எல்லாவற்றையும் மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், தெருவோர வித்தையை பார்க்கும் பார்வையாளனைப்போல.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment