Thursday, May 14, 2009
Sunday, May 10, 2009
வறுமை தலையெழுத்துமல்ல, கருப்புப்பணம் தனியுரிமையுமல்ல….
இந்திய அரங்கில் சுவிஸ் வங்கி பற்றியும், கருப்புப்பணம் பற்றியும் அவ்வப்போது பேசப்படுவதுண்டு, அந்த வேகத்திலேயே மறக்கப்படுவதுமுண்டு. இந்த முறை தேர்தலோடு இணைந்து வந்திருப்பதால் கொஞ்சம் பரபரப்பு ஏறிவிட்டிருக்கிறது. நாட்டின் மொத்த மக்கட்தொகையில் சற்றேறக்குறைய பாதி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள ஒரு நாட்டின் (வறுமைக்கோடு என்பதே ஒரு ஏமாற்றுப்புள்ளிவிபரம் என்பது வேறு விசயம்), கடந்த பத்து வருடங்களில் மட்டும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட ஒரு நாட்டின், எழுபது கோடி பேர் ஒரு நாளை இருபது ரூபாய் வருமானத்தைக்கொண்டு கழித்துக்கொண்டிருக்கும் ஒரு நாட்டின் அயோக்கிய அதிகாரவர்க்கமும், ஓட்டுப்பொருக்கி அரசியல் வாதிகளும், இரக்கமற்ற முதலாளிகளும் திரையுலக கழிசடைகளும், விளையாட்டிற்கு தேசியச்சாயம் பூசும் கிரிக்கெட்டவர்களும் பதுக்கிவைத்திருக்கும் கணக்கில் வராத கள்ளப்பணம் மட்டுமே 64 லட்சம் கோடி என்றால் வறுமையில் உழலும் மக்கள் தங்களின் வறுமைக்கு காரணம் தலை எழுத்து, கடவுள் விதித்தது என நம்பிக்கொண்டிருப்பது எவ்வளவு பரிதாபகரமானது. மக்களை வதைத்துக்கொண்டிருக்கும் உலக வங்கி, உலக வர்த்தகக்கழக சட்டங்கலெல்லாம் கடனின் வழியாகத்தான் இந்தியாவுக்குள் நுழைந்தன. நலத்திட்டங்களின் பெயரில் வாங்கப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட இந்தியாவின் மொத்தக்கடன் 4.87 லட்சம் கோடிதான். ஆனால் சுவிஸ் வங்கிகளில் சிலர் மறைத்துவைத்திருக்கும் பணம் மொத்தககடனை விட 13 மடங்கு அதிகம். இப்படி இந்தியாவின் பணம் மட்டுமல்ல உலகின் அனைத்து நாடுகளிலுமுள்ள முறைகேடான பனம் சுவிஸ் வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ளது. சற்றேறக்குறைய முந்நூறு ஆன்டுகளாக முறைகேடாக வரிஏய்ப்பு செய்த பணத்தை காப்பாற்றிக்கொடுக்கும் வேலையை செய்துவருகிறது. தெளிவாகச்சொன்னால் முதலாளியம் அரும்பத்தொடங்கிய காலகட்டத்தில் அந்த இலக்கணத்தின்படி உருவானது தான் இந்த சேவை. இந்த வங்கியில் போடப்படும் பணம் யாருடையது என்பதை இவ்வங்கிகள் வெளியிடாமல் ரகசியம் காக்கின்றன. இடையில் ஹிட்லர் யூதர்களை வேட்டையாடியபோது அவர்களின் பணம் ஹிட்லரின் கைகளில் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த வங்கிகளின் சட்டவிதிகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. ஆனால் இப்போதோ நிலமைகள் மாறுகின்றன. முதலாளித்துவ நெருக்கடிகளால் உள்ளுக்குள் நொருங்கிக்கொண்டிருக்கும் வளர்ந்த நாடுகளின் பார்வை இந்த சுவிஸ் வங்கிகளின் மேல் திரும்பியிருக்கிறது. இந்த நாடுகளின் நிர்ப்பந்தங்களால் சுவிஸ் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் விபரங்களை வெளியிட முன்வந்திருக்கின்றன, ஒரு நிபந்தனையுடன். அந்தந்த நாடுகளின் அரசுகள் தான் இதனை கேட்டுப்பெற முடியும். அப்படி வெளியில் கசிந்த விபரங்களின் படிதான் உலகின் வேறெந்த நாடும் நெருங்க முடியாதபடி இந்தியர்கள் குவித்துவைத்திருக்கும் பணம் உச்சத்தில் இருக்கிறது. அரசு இந்திய வாடிக்கையாளர்களைப்பற்றிய விபரங்களை கேட்டுப்பெற முடியும் என்றான பின்னும் இந்திய அரசு இந்த கள்ளப்பணத்தைப்பற்றி கள்ள மௌனம் சாதிக்கிறது. பிஜேபி இதைப்பற்றி பேசுகிறது என்பதால் அது ஆட்சிக்கு வந்தால் இந்தப்பணத்தை கொண்டுவந்துவிடும் என்றோ விபரங்களை வெளியிடும் என்றோ எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் எல்லா ஓட்டுக்கட்சிகளும் விதிவிலக்கின்றி இந்தப்பட்டியலில் வரும் என்பதில் ஐயமொன்றுமில்லை. 2003,2007 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மோடி ரகசியமாக சுவிஸ் சென்று வந்திருக்கிறார். இந்தியாவுக்கான சுவிஸ் தூதர் பிலிப், “இந்தியாவிடமிருந்து இதுவரை எந்தக்கோரிக்கையும் வரவில்லை. வந்தால் சுவிஸ் வங்கிச்சட்டங்களின்படி நடவடிக்கைகள் தொடங்கும்” என்று கூறியிருக்கிறார். ஓட்டுக்கட்சிகள் அந்த விபரங்களை கேட்டுப்பெறக்கூடும், பெற்ற விபரங்களைக்கொண்டு பேரங்கள் நடைபெறும். பல்வேறு விதமாக ஏற்கனவே ஏமாற்றப்பட்ட நாம் இந்த விசயத்திலும் ஏமாற்றப்படுவோம். முறைகேடாக பணம்சேர்த்தவர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு அதைக்கொண்டு அரசியல் பேரங்களை நடத்திமுடித்து தங்களின் கரையான வரலாற்றை மறைத்துக்கொண்டு உங்களிடம் வாக்குக்கேட்டு வருவார்கள், ஜனநாயகக்கடமையை நமக்கு நினைவூட்டிக்கொண்டு. என்ன செய்வதாய் உத்தேசம்? இப்போதெல்லம் எருமைச்சாணம் கிடைப்பதில்லை என்றாலும் தேடி சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளுங்கள். அவசியமிருக்கிறது.
நன்றி : தமிழ்வட்டம்
Saturday, April 18, 2009
அறிந்துக்கொள்வோம் வாருங்கள் ...
உலக முஸ்லிகளின் தலைவராக போற்றப்படக்கூடிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தன் மரணத்தின் போது அரபு தீபகற்பத்தில் சுமார் 23 லட்சம் சதுர மையில்களை ஆண்ட மாமன்னராக இருந்த போதும் தன் எளிமையான வாழ்க்கையின் மூலம் , எதிரிகள் தொரோகிகள் கூட அவர்மேல் களங்கம் கற்பிக்க முடியாதவாறு தூய வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் 25ஆம் வயது வரை வணிகராகவும், நாற்பதாம் வயது வரை ஊரிலேயே பெரிய செல்வந்தராகவும் இருந்தார்கள்.அவருக்கு படிக்கவும் தெரியாது, எழுதவும் தெரியாது. தன் 40 ஆம் வயதில், தமக்கு இறைவனிடமிருந்து செய்தி வருவதாக வாதிட்டார்.
ஆம். அவர் முலமாக அருளப்பெற்ற அத்திருக்குர்ஆனை ஆராய்ந்தால் அரபு மொழியில் மிக உயர்ந்த தரத்துடனும், இசை நயத்துடனும், காலத்தால் முரண்படாமலும், அக்காலத்து மக்களால் கற்பனை செய்து பார்கக முடியா பல அறிவியல் தகவல்களை கொண்டதாக அல்குர்ஆன் விலங்குகிறது .
இதன்மூலம் பல மக்கள் இஸ்லாத்தை ஆராய்ந்தார்கள். ஏற்றும் கொண்டார்கள். இதன்காரமாக செல்வத்தை பெருக்கிக் கொள்வதும் நோக்கமாக இருந்ததா என்றால் இல்லவேயில்லை.
ஏனெனில் மார்க்கத்தை எடுத்துரைத்ததால் அவர்கள் சொந்த ஊரை விட்டும், தமது சொத்துக்கள் இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
ஆனாலும் அனைத்தையும் துறந்து விட்டு வெறுங்கையுடன் ஊரை விட்டு வெளியேறினார்கள்.
பல்லாண்டுகள் பாடுபட்டு திரட்டிய செல்வங்கள் அனைத்தையும் தமது கொள்கைக்காக இழக்கத் துணிந்தவருக்கு பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வது நோக்கமாக இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
ஊரை விட்டு விரட்டப்பட்டு மதீனா நகரில் தஞ்சம் புகுந்து, இஸ்லாமிய பணி செய்து ஓரு இஸ்லாமிய ஆட்சியையும் நிறுவி மாமன்னராக ஆனபோதும்
• தமக்காக செல்வம் திரட்டவில்லை.
• அரண்மனையில் வசிக்கவில்லை.
• அபிசீனியா மன்னருக்கு கடிதம் எழுதுவது முதல் ஆடுகளில் பால் கரப்பது வரை தன் வேலையை தானே செய்துக்கொண்டார்.
• கடைசி வரை குடிசையிலேயே வாழ்ந்து குடிசையிலேயே மரணித்தார்கள்.
• அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் ஒரு நாளில் தொடர்ச்சியாக மூன்று வேளை உணவு உண்டதில்லை.
• நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இரண்டு சிறிய போர்வைகளையே மேலாடையாகவும், கீழாடையாகவும் அணிந்தனர். விஷேச நாட்களில் அணிந்து கொள்வற்காக தைக்கப்பட்ட ஆடைகள் ஒன்றிரண்டு மட்டுமே அவர்களிடம் இருந்தன.
• வாழ்நாள் முழுவதும் அவர்கள் வீட்டில் விளக்கு இருந்ததே இல்லை. இருட்டிலே தான் அவர்கள் இரவுப் பொழுதைக் கழித்திருக்கிறார்கள்.
• தமது கவச ஆடையை அடைமானம் வைத்து மீட்காமலே மரணித்தார்கள்.
• ஒரு நிலப்பரப்பு, குதிரை, சில ஆடுகள் ஆகியவை தாம் அவர்கள் விட்டுச் சென்றவை. அதுவும் தமது மரணத்திற்குப் பின் அரசுக்குச் சேர வேண்டும்: தமது குடும்பத்தினர் வாரிசாகக் கூடாது என்று பிரகடனம் செய்தார்கள்.
நபிகள் நாயகத்தின் இந்தத் தூய வரலாற்றை அறிகின்ற எவரும் பொருள் திரட்டுவற்காக இறைவன் பெயரால் நபிகள் நாயகம் கற்பனை செய்தார்கள் என்று நினைக்க மாட்டார்.
மக்களிடம் புகழ், மரியாதை அடைவற்காக இப்படிக் கடவுள் பெயரைப் பயன்படுத்தியிருப்பார்களோ என்று நினைத்தால் அதுவும் கிடையாது.
தம் காலில் யாரும் விழக்கூடாது என்றும் தான் ஒரு சபைக்கு வரும்போது தனக்காக யாரும் எழுந்து நிற்க்ககூடாது என்றும் கண்டித்துள்ளார்கள். ஆதலாலே தன் உருவத்தை சித்திரமாக கூட வரயக்கூடாது ஏனனில் இதன்மூலம் வரும் சந்ததியினர் தன்னை கடவுளாக மாற்றிடுவார்களோ என்ற அச்சவுணர்வின் காரணமாக அதையும் தடுத்தவர் தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.
Tuesday, April 7, 2009
அஜ்மல் கசாப் க்கு வக்கீல் கிடைத்தார்
மும்பை தாக்குதலில் ஈடுப்பட்ட அஜ்மல் கசாப் வழக்கில் ஆஜராவேன் என அவருக்காக நியமிக்கப்பட்ட பெண் வக்கீல் அஞ்சலி வாக்மாரே அறிவித்துள்ளார். அஜ்மல் கசாப் தரப்பில் ஆஜராக நியமிக்கப்பட்டார் அஞ்சலி வாக்மாரே. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டில் சிவசேனா தொண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள் . இந்த சம்பவத்தின் எதிரொலியாக அஞ்சலி வழக்கில் இருந்து விடுபடுவார் என பரபரப்பு செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அஞ்சலி கோர்ட்டில் தனது முடிவை அறிவிக்க அவகாசம் கேட்டார். அவரது முடிவு இன்று வெளியாகும் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவர் வழக்கில் ஆஜராக சம்மதம் தெரிவித்துள்ளார் . கோர்ட்டில் அவர் தான் வழக்கில் ஆஜராக தயாராக இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் சிவசேனா தொண்டர்கள் இவருக்கு கொளை மிரட்டல் விடுத்தும், தன் உயிருக்கு என்ன ஆபத்து நெர்ந்தாலும் தான் இந்த வழக்கை ஆராயப்போவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு மகாராஷ்டிரா அரசு கூடுதல் பாதுகாப்பு அளித்துள்ளது. இசட் பிரிவு பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. அஞ்சலி வாக்மாரே மும்பை காவல்துறை கமிஷனரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது .
Sunday, April 5, 2009
மறுக்கப்படும் நீதி !
ஜனநாயகம், மதச்சார்பின்மை இவ்விரண்டும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரு பெரும் தூண்களாகும். "சட்டத்தின் முன் அனைவரும் சமம்; அனைவருக்கும் அவரவர்களின் மத நம்பிக்கைகளின்படி செயல்பட்டுக் கொள்வது நமது ஜனநாயகம் வழங்கும் அடிப்படை உரிமையாகும்" - உலக அளவில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்புடன் வைக்கும் சட்டத்தின் மிக முக்கிய நிபந்தனைகளான இவை இரண்டும் துரதிஷ்டவசத்தால் பெரும்பாலான சமயங்களில் வெறும் ஏட்டில் மட்டும் வைத்து அழகு பார்க்கும் வரிகளாக மாறிப்போகின்றன.
அனைவருக்கும் சமமான நீதி நடைமுறை உறுதிப் படுத்தப்படுவதே ஜனநாயகம் தழைப்பதற்கும் மக்கள் அமைதியாக வாழ்வதற்குமான அடிப்படை காரணிகளாகும். ஆனால், நம் நாட்டைப் பொருத்தவரை நீதி என்பது பணம், பதவியுடையவர்களுக்கு ஒரு விதமாகவும் ஏழைகளுக்கு வேறு விதமாகவுமே உள்ளது. அதனாலேயே காஞ்சி காம கோடி, அத்வானி, மோடி, ஜெயலலிதா, ஹர்ஷத் மேத்தா போன்ற இன்னபிற கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அராஜகம், மோசடி போன்றவற்றில் ஊறிப்போனவர்கள் உள்ளேயும் வெளியேயும் சுதந்திரமாக எவ்வித பயமும் இன்றி வலம்வருகின்றனர். அதேவேளை, சின்னஞ்சிறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சாதாரணமானவர்கள் மீது மட்டும் சட்டம் தனது முழுவலிமையைப் பிரயோகிக்கின்றது.
சமநீதி விஷயத்தில் வலியவன், எளியவன் என்ற பாரபட்சம் பார்க்கும் நீதி, முஸ்லிம்கள் என்று வரும் பொழுது அத்தகைய கருணை வாசலையும்கூட அடைத்து விடுகின்றது.
அநியாயம் செய்திருந்தாலும் வலியவனுக்குச் சாதகமாகவும் அநீதி இழைக்கப் பட்டிருந்தாலும் எளியவனுக்குப் பாதகமாகவும் வளைந்து கொடுக்கும் இத்தகையச் செயலைகளை "நீதி தேவன் மயக்கம்" என்ற பெயரில் அறிஞர் அண்ணா ஒரு நாடகம் எழுதினார். 1954ஆம் ஆண்டு மேடையில் அரங்கேறிய அவரது நாடகம் இப்போது(ம்) அரங்கேறிக் கொண்டிருப்பது நமது நீதிமன்றங்களில்!
இந்திய விமானப்படை ஊழியர் அன்ஸாரீ அஃப்தாப் அஹ்மது என்பவர் சீக்கிய ஊழியர்களுக்கு வழங்கப் பட்டு நடைமுறையிலிருக்கும் தாடி வளர்த்துக் கொள்ளும் மத உரிமையைத் தனக்கும் அளிக்க வேண்டும் எனக் கேட்டுத் தொடர்ந்த வழக்கில், இந்திய விமானப்படை வழிகாட்டு நெறிமுறைகள் 2003இன்படி "சீக்கியர்களுக்கு வழங்கும் உரிமையை 2002ஆம் ஆண்டுக்குப்பிறகு விமானப்படைக்குத் தேர்வு செய்யப் பட்ட முஸ்லிம்களுக்கு வழங்க முடியாது" என்று கடந்த ஆண்டு பஞ்சாப்/ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மற்றவர்க்கு வளைந்தும் முஸ்லிம் என்றால் நிமிர்ந்தும் நிற்கும் சட்டம் இந்திய விமானப்படைக்கு மட்டும் சொந்தமானதன்று.
மத்தியப்பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்திலுள்ள சிரஞ்ச் நகரில் இயங்கி வரும் 'நிர்மலா கான்வெண்ட்' என்ற பள்ளியில் தொடக்கம் முதல் பத்தாம் வகுப்புவரை முஹம்மது ஸலீம் என்ற முஸ்லிம் மாணவர் கல்வி பயின்று வந்தார். பத்தாம் வகுப்புப் படிக்கும்போது அவருக்குத் தாடி வளர்ந்து விட்டது. "தாடியை மழிக்காமல் பள்ளிக்கு வருவதாக"க் கூறிப் பள்ளியின் நிர்வாகி ப்ரின்ஸிபால் தெரஸா மார்ட்டின், மாணவர் ஸாலிமைப் பள்ளியிலிருந்து நீக்கினார். அதை எதிர்த்து, தன்னைத் "தாடி வளர்த்துக் கொள்ளப் பள்ளி அனுமதிக்க வேண்டும்" எனக் கோரி முதலில் பள்ளிக்கு முறைப்படி விண்ணப்பித்தார். பள்ளி நிர்வாகம் மறுதலித்துவிடவே, உயர்நீதி மன்றத்தில் மாணவர் ஸலீம் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார்.
"முழுமையாக மழித்துக் கொண்டு வரவேண்டும்" என்ற பள்ளிச் சட்ட-திட்டத்தினைத் தளர்த்தக் கோரி ஸலீம் சமர்ப்பித்த மனு உயர்நீதி மன்றத்தில் கடந்த 30.12.2008இல் தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விடாப் பிடியாக, "தாடி வளர்ப்பது என்னுடைய மத உரிமை. மதசார்பற்ற இந்தியாவில் வாழும் குடிமகனுக்கு (சட்டப் பிரிவு 25இன்படி) தன் மத நம்பிக்கைப்படி வாழ்வதற்கான உரிமையை மறுக்கக் கூடாது. எனவே தாடி வளர்த்துக் கொண்டு பள்ளிக்கு வருவதற்கு எனக்கு அனுமதி வழங்க வேண்டும்" எனக் கோரி, உச்சநீதி மன்றத்துக்கு வழக்கைக் கொண்டு சென்றார்.
ஸலீம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி இரவீந்திரன் தலைமையிலான அமர்வு நீதிமன்றம் விசாரித்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு, மாணவர் ஸாலிமுடைய கோரிக்கையை, அவர் பயிலும் பள்ளியின் சட்ட-திட்டங்களை மட்டும் காரணம் காட்டி மறுதலித்திருந்தால் பிரச்சினை பெரிதாகி இருக்காது.
ஆனால், சட்டம் கற்றுத் தேர்ந்ததாகச் சொல்லப் படும் ஒரு நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு என்பவர், "தாடி வைப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிசமாகும்" என்ற காரணம் கூறி கடந்த திங்கட்கிழமை (30.3.2009) வழக்கைத் தள்ளுபடி செய்து, தன் அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாமிய நடைமுறைக்கும் வெறும் 30 ஆண்டுகால வரலாறுடைய தாலிபானுக்கும் என்ன சம்பந்தம்? நீதிபதி மார்கண்டேய கட்ஜுவிற்கே வெளிச்சம்!
தாலிபான் என்ற பெயரே அறியப் படாத ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் முஸ்லிம் ஆண்கள் தாடி வளர்த்தும் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்தும் வருகின்றனர். தாடி இல்லாத ஆண் சீக்கியர் இல்லை என்னும் அளவுக்கு சீக்கிய ஆண்கள் தாடியோடுதான் இருப்பர். தாடி வளர்த்திருப்பவரெல்லாம் தாலிபான் அமைப்பின் உறுப்பினரா? நம் பிரதமரை நீதிபதி கட்ஜு ரொம்பத்தான் தாக்குகிறார்!
"தாலிபான்களை நம் நாட்டில் அனுமதிக்க முடியாது" என்று கூறியதோடு, "நாளைக்கு ஒரு (முஸ்லிம்) மாணவி, பர்தா அணிந்து கொண்டு பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கலாம். நாம் அதை அனுமதிக்க முடியுமா?" என்று நீதிபதி கட்ஜு அறிவு(?)ப்பூர்வமான ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
"நாட்டின் மதசார்பற்ற நிலைபாட்டைப் பயன் படுத்திக் கொண்டு இந்தியாவைத் தாலிபான் மயமாக்குவதை அனுமதிக்க இயலாது" எனவும் நீதிமன்றத்துக்குள்ளேயே நீதிபதி ஜோக்கடித்திருக்கிறார்.
"சீக்கியர்களுக்குத் தாடி வளர்த்துக் கொள்ளவும் தலைப்பாகை அணியவும் அனுமதி இருக்கும்போது, என்னை மட்டும் தாடியை மழிக்க நிர்பந்திப்பது பள்ளி நிர்வாகத்தின் தெளிவான இரட்டை நிலைபாடு" என ஸலீம் வாதித்தார்.
ஆனால் பயனில்லை. "இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 30ஆம் பிரிவின்படி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள், தனியாக சட்டம் உருவாக்கிக் கொள்வதற்கு அனுமதியுள்ளது. அவற்றைப் பின்பற்றுவதற்கு இயலாது எனில், ஸலீம் வேறு ஒரு பள்ளியைத் தேர்வு செய்து கொள்ளட்டும்" எனவும் நீதிபதி அறிவுரை கூறியுள்ளார்.
இந்நாட்டில் ஒரு சமுதாயத்திற்கு அனுமதிக்கப்படும் நீதி, அதே வடிவில் பின்பற்றுவதற்கு முஸ்லிம்கள் எனில் மறுக்கப்படுகிறது. இது "இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் மத அடிப்படைகளைப் பின்பற்றுவதற்கான உரிமைகளுக்கு" முரணான நிலைபாடு எனில், வழக்கிற்குத் தொடர்பில்லாத வகையில் இஸ்லாமிய அடிப்படைகளைச் சம்பந்தமில்லாத தனிப்பட்ட குழுக்களோடு தொடர்பு படுத்தி இழிவுபடுத்துவது இந்திய நீதித்துறைக்கு அவமானத்தைப் பெற்றுத்தரும் செயலாகும். அனைவரையும் சமமான கண்ணோட்டத்தோடு அணுகவேண்டிய, நாட்டின் உன்னத பீடத்தில் அமர்ந்திருக்கும் பொறுப்பான அதிகாரியின் சட்டமீறலுமாகும்.
"தாடி வளர்ப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிசமாகும்; இந்தியாவில் தாலிபானிஸம் வளர்வதை அனுமதிக்கமுடியாது" என்று உண்மையைப் பொய்களுடன் கலந்து உண்மையைப் பொய்யாக்குவதையும் பொய்யை உண்மையாக்குவதையும் அதனை வைத்து சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதையும் தங்களது பாணியாகக் கொண்டுள்ள ஹிந்துத்துவத்தின் ஒரு மோடி, அத்வானி வகையறாக்களின் வாயிலிருந்து இத்தகைய சொற்கள் உதிர்ந்திருந்தால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், அதுவே நாட்டின் உன்னத பீடத்தை அலங்கரிக்கும் ஒரு நீதிபதியின் வாயிலிருந்து வருவதென்றால்.....?
நீதிபதி கட்ஜுவின் அறியாமைக் கருத்துகளுக்கு எதிராகவும் நீதியின் இரட்டைமுக நிலைபாட்டிற்கு எதிராகவும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்திய நீதித்துறையின் மீது இப்பொழுதும் நம்பிக்கை இழக்காத முஸ்லிம்கள் என்ன செய்யலாம்? என்று சிந்தித்தோமெனில், நமக்குக் கிடைக்கும் விடை, நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் 'தாலிபான்' பேச்சை எதிர்த்து வழக்குத் தொடுக்கலாம் என்பதே.
-சத்தியமார்க்கம்
Friday, February 27, 2009
மத நல்லிணக்க கலந்துரையாடல் மற்றும் பிற மத சகோதரர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி
மத நல்லிணக்க கலந்துரையாடல் மற்றும் பிற மத சகோதரர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி
நாள் : 28.02.2009 சனிக்கிழமை
நேரம் : காலை 9.30 முதல்
இடம் : சோலை வாழியம்மன் திருமண மண்டபம்,
31, திருச்சி மெயின் ரோடு, விழுப்புரம் - 605 602
Saturday, February 21, 2009
மாவீரன் திப்பு சுல்தான்
200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திப்பு சுல்தானின் வரலாற்றை நாம் படிக்க வேண்டும். ஆங்கிலேயரை எதிர்த்து தீரத்துடன் போரிட்டவன் அவன். ஆங்கிலேயருக்கு அடிமையாகி இருந்தால் தென்னகப் பகுதிகளுக்கே அவன் பெரிய மன்னராக ஆகியிருப்பான். 1782 - ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திப்பு சுல்தான் மன்னர்களிடமிருந்து தானமாக நிலங்களை பெற்று வைத்திருந்த ஜமீன்தார்களிடமிருந்து நிலங்களை மீட்டு அதை ஏழை தலித் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் அளித்து 200 ஆண்டுகளுக்கு முன்பே நிலச் சீர்திருத்தத்தை அமல்படுத்தியவன்.
அதனால்தான் பிராமணர்களும் ஆங்கிலேயர்களும் திப்பு சுல்தானை துரோகியைப் போன்று திரித்து தவறான வரலாற்றை எழுதியுள்ளனர். உண்மையான வரலாற்றை நாம்தான் வெளிக் கொணர வேண்டும்.
1782 முதல் 1799 வரை ஆட்சி புரிந்த திப்பு தான் அரசன் இல்லை: மக்கள் பிரதிநிதி என்று கூறிக் கொண்டவன்.
தவறு செய்பவர்களை சிறையில் அடைக்காமல் அவர்களுக்கு மாற்றுப் பணிகளை வழங்கி அதை வருமானமாக மாற்றியவன் திப்பு.
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்ட திப்பு மற்றவர்களைப் போல ஆடம்பரத்தை விரும்பாமல் மக்கள் நலனையும் ஆங்கிலேயரை விரட்டி அடிப்பதையும் தன் கடமையாகக் கொண்டிருந்தான்.
மேலும் கடைசி 6 மணி நேரத்துக்கு முன் எதிரிகள் படையெடுத்து வருவதையறிந்து அவர்களை எதிர் கொள்ள தன் படைகளை தயார் படுத்தினான் திப்பு. அந்த அளவுக்கு தகவல் தொடர்பு வசதிகளையும் அவன் வைத்திருந்தான்.
திப்பு சுல்தான் இறந்த பின் அரண்மனைக்குள் புகுந்த ஆங்கிலேயர்கள் முதலில் திப்புவின் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரசீக மற்றும் சமஸ்கிரத மொழி நூல்களை லண்டனுக்கு எடுத்துச் சென்றனர். பின் அந்த நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டன.
அதன் பின்னரே விலை உயர்ந்த நகைகள் ஆபரணங்களை அவர்கள் அள்ளிச் சென்றனர்.
திப்புவின் அறிவும் செல்வமுமே இங்கிலாந்தின் தொழிற்புரட்சிக்கு காரணம்.
ஆங்கிலேயர்களை எதிர்க்க ஹைதரபாத் நிஜாம், மராட்டிய மன்னர்களை ஒன்றிணைக்க திப்பு மேற்கொண்ட முயற்ச்சிக்கு இருவரும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த இணைப்பு நடைபெற்றிருந்தால் 1799- ஆம் ஆண்டே நம் நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றிருக்கும்.
நம்நாடு முன்னேற கணிணி, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவை மட்டும் துணை புரியாது. ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும்.
அமெரிக்கர்கள் நம் நாட்டில் விஞ்ஞானிகள் உருவாவதை விரும்பவில்லை. மென்பொருள் பொறியாளர்கள்தான் உருவாக வேண்டுமென விரும்புகின்றனர். நம் இளைஞர்கள் விஞ்ஞானிகளாக உருவாக அடிப்படை அறிவியலை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
திப்புவின் அறிவுத் திறன், தொழில் நுட்பம், நிர்வாகத் திறன் ஆகியவற்றை நாம் இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.'
-தலகாடு சிக்கே ரங்க கௌட
திப்பு சுல்தான் பிரசார சமிதி தலைவர்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் தஞ்சையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் இசை விழாவில் பேசிய பேச்சைத்தான் நாம் மேலே படித்தது.
ஆதாரம்
தினமணி
25-2-2007
இது போன்ற தலைவர்களின் உண்மை வரலாற்றை மறைப்பதன் மூலம் நம் நாட்டுக்கு நாமே தீங்கிழைக்கிறோம். இவ்வளவு சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நாயகனின் சரித்திரத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போது 'இது ஒரு கற்பனைக் கதை. இதில் வரும் சம்பவங்கள் எவரையும் குறிப்பிடுபவை அல்ல' என்ற செய்தியோடு வெளியிட்டார்கள்.
அதே சமயம் ராமாயணமும் மகாபாரதமும் ஒளிபரப்பும் போது வரலாற்று காவியம் என்ற அடை மொழியோடு ஒளிபரப்புவார்கள். என்ன ஒரு நடுநிலைமை!
-சுவனப்பிரியன்