பெட்ரோல் விலை உயர்வும்,இதுவரை அரசு அடித்த லாபமும் ! <script language='javascript' src='http://ping.thenkoodu.com/ping_comments.php?posturl=http://dravidamuslium.blogspot.com/2008/06/blog-post_6854.html&postid=1414097556497154053&blogurl=http://dravidamuslium.blogspot.com/2008/06/blog-post_6854.html&cmt=2' type='text/javascript'> </script> ~ திராவிட முஸ்லிம்

Monday, June 2, 2008

பெட்ரோல் விலை உயர்வும்,இதுவரை அரசு அடித்த லாபமும் !

பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. எப்பொழுதெல்லாம் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அதனை நியாயப்படுத்த, ஒரு ""ரெடிமேட்'' காரணத்தைக் கூறி வருகிறது, மைய அரசு. ""சர்வதேச சந்தை விலையை ஒப்பிடும்பொழுது, இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை மலிவாக விற்கப்படுவதாகவும்; அதனால் அரசு நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட நட்டம் ஏற்படுவதாகவும் (தற்போதைய நட்டக் கணக்கு ரூ. 70,000 கோடி); அந்த நட்டத்தை இனியும் தாங்க முடியாது என்ற நிலையில்தான் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மிதமாக ஏற்றப்படுவதாகவும்'' மைய அரசும், அதன் எடுபிடிகளும் நியாயப்படுத்தி வருகின்றனர். ஆனால், பெட்ரோலியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து, நாடாளுமன்ற நிலைக் குழு அரசுக்கு அளித்துள்ள அறிக்கையைப் படித்தால், அரசு கூறிவரும் நட்டக் கணக்கு, நியாயவாதங்கள் அனைத்தும் மிகப் பெரிய பித்தலாட்டம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படும் மூலப் பொருளான கச்சா எண்ணெய் (ஞிணூதஞீஞு ணிடிடூ) நமது நாட்டில் தேவையான அளவிற்குக் கிடைப்பதில்லை என்றாலும் கூட, இந்தியாவின் (பெட்ரோலிய) தேவையில் ஏறத்தாழ 30 சதவீதத்தை உள்நாட்டில் கிடைக்கும் கச்சா எண்ணெய்தான் பூர்த்தி செய்கிறது. வியாபாரம் என்று பார்த்தால்கூட, உள்நாட்டில் எடுக்கப்படும் கச்சா எண்ணெயை, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு ஈடாக விற்பனை செய்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், மைய அரசோ, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது என்னென்ன உற்பத்திச் செலவீனங்கள் ஏற்றப்படுமோ, அவை அனைத்தையும் உள்நாட்டில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் மீதும் ஏற்றி வைத்து விற்பனை செய்து வருகிறது. உள்நாட்டுத் தயாரிப்புகளை, ஃபாரின் சரக்குகளைப் போல விற்கும் மோசடி வியாபாரத்தை, மைய அரசு சட்டபூர்வமாகவே நடத்தி வருகிறது.

இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற நிலைக்குழு, பெட்ரோலியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து அரசுக்கு ஆக. 2005இல் அளித்துள்ள அறிக்கையில், ""இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் கடற்பயணச் சரக்குக் கட்டணம், துறைமுகக் கட்டணம், சுங்கவரி போன்ற செலவீனங்களை உள்நாட்டு கச்சா எண்ணெய் மீது விதித்து விலை நிர்ணயம் செய்யக் கூடாது'' என அரசுக்குப் பரிந்துரை செய்தது. ஆனால் இப்பரிந்துரை அறிக்கையைக் கரையானுக்கு இரையாக்கியது, மைய அரசு.

பெட்ரோலியப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகள் சிறீலங்காவில் 37%, தாய்லாந்தில் 24%, பாகிஸ்தானில் 30%, மற்ற பல நாடுகளில் 20 சதவீதமாகவும் இருக்கும்பொழுது இந்தியாவில், பெட்ரோலியப் பொருட்கள் மீது மாநில அரசுகள் விதிக்கும் விற்பனை வரி மட்டும் 18.9 சதவீதத்தில் இருந்து 34 சதவீதம் வரை எகிறிப் பாய்கிறது. இவ்விற்பனை வரி தவிர்த்து, சுங்கவரி, கலால்வரி, நுழைவுவரி, கல்விவரி, எண்ணெய் நிறுவனங்களின் வளர்ச்சி வரி என அடுக்கடுக்காக பெட்ரோலியப் பொருட்கள் மீது பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றன. ஒட்டு மொத்தமாக, ஒரு லிட்டர் பெட்ரோலின் சில்லறை விற்பனை விலையில் 57 சதவீதமும்; ஒரு லிட்டர் டீசலின் சில்லறை விற்பனை விலையில் 35 சதவீதமும் பல்வேறு வரிகளாக மக்களிடமிருந்து பிடுங்கப்படுகின்றன.பெட்ரோலியத்துறை அமைச்சகம் நாடாளுமன்ற நிலைக் குழுவுக்குக் கொடுத்துள்ள அறிக்கையின்படி, 200405ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் மைய அரசுக்குக் கிடைத்த வரி வருமானம் 77,692 கோடி ரூபாய்; மாநில அரசுகளுக்குக் கிடைத்த வரி வருமானம் 43,254 கோடி ரூபாய். அந்த ஆண்டு, மைய அரசிற்கு சுங்கவரி மூலம் கிடைத்த வருமானத்தில் (54,738 கோடி ரூபாய்), 35 சதவீதப் பங்கு பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் மட்டுமே கிடைத்திருக்கிறது.


பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் ஒவ்வொரு முறையும், அவ்விலை உயர்வுக்கு நேர் விகிதத்தில் அரசின் வரி வருமானமும் அதிகரித்து வந்திருக்கிறது. 200506 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், 53,182 கோடி ரூபாய் சுங்க வரியாக வசூலிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கு பின்னர் 64,215 கோடி ரூபாயாகத் திருத்தப்பட்டது. அந்த பட்ஜெட் ஆண்டின் இறுதியில் சுங்க வரி வருமானம் 65,050 கோடி ரூபாயாக அதிகரித்தது. பட்ஜெட்டில் போட்டதைவிட 22.32 சதவீதம் அதிகமாக சுங்கவரி வசூலானதற்கு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வும் காரணமாக அமைந்தது என மைய அரசின் தணிக்கை அறிக்கை குறிப்பிடுகிறது.

எங்கும் இல்லாத அதிசயமாக, எண்ணெய் நிறுவனங்களின் வளர்ச்சி வரி என்ற பெயரில் புதுவிதமான வரியொன்றை உள்நாட்டு கச்சா எண்ணெய் மீது விதித்து, அதன்மூலம் ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய் வசூலித்து வருகிறது, மைய அரசு. 1974ஆம் ஆண்டு தொடங்கி விதிக்கப்பட்டு வரும் இவ்வரியின் மூலம், இதுநாள்வரை ஏறத்தாழ 64,000 கோடி ரூபாய் மைய அரசிற்கு வருமானம் கிடைத்திருந்தாலும், எண்ணெய் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக இவ்வரி வருமானத்தில் இருந்து செலவழிக்கப்பட்டுள்ள தொகை 902 கோடி ரூபாய் தான். மீதிப் பணம் முழுவதையும் மைய அரசு ஊதாரித்தனமாகச் செலவழித்திருப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழு குற்றஞ்சுமத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள 18 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் 17 அரசு வசமும், ஒரு ஆலை தரகு முதலாளி அம்பானி வசமும் உள்ளன. இந்தியாவின் ஒட்டு மொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் 74 சதவீதம் அரசு நிறுவனங்களிடமும், 26 சதவீதம் அம்பானியிடம் இருக்கிறது. எனினும், இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் அம்பானி நிறுவனம்தான் (59 சதவீத ஏற்றுமதி) முன்னணியில் இருக்கிறது. அரசாங்கம் அம்பானியிடம் கொண்டுள்ள வர்க்கப் பாசம்தான் இதற்குக் காரணம். பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, அரசு சுங்க வரிச் சலுகைகளை அளித்திருக்கிறது. இந்தச் சலுகைகளை அம்பானியே ஏகபோகமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே, ஏற்றுமதி வர்த்தகத்தில் அரசு எண்ணெய் நிறுவனங்கள் அடக்கி வாசிக்கின்றன.

இதனை ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு, ""சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபமே போதுமானது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனியாக வரிச் சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை. இந்த வரிச் சலுகைகளை நீக்குவதால் கிடைக்கும் வருமானத்தை, உள்நாட்டு மக்கள் பலன் அடையும்படி, பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கப் பயன்படுத்தலாம்'' எனப் பரிந்துரைத்தது.

இந்த ஆலோசனையைக் கேட்டு, அம்பானி அலறுவதற்கு முன்பாகவே, அரசாங்கம் அலறியது. ""இந்தியாவில் தயாரிக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் போட்டியைச் சமாளிக்கும் வண்ணம் விலை மலிவாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சுங்கவரிச் சலுகைகளை அளித்து வருகிறோம். எனவே, இச்சலுகைகளைத் திரும்பப் பெற முடியாது'' எனக் கூறி, அம்பானியின் வயிற்றில் பாலை வார்த்தது.


அரசாங்கத்தின் கொள்கை எப்படி ஏறுக்கு மாறாக இருக்கிறதென்று பாருங்கள். பெட்ரோலும், டீசலும், மண்ணெண்ணெயும், சமையல் எரிவாயுவும் உள்நாட்டு மக்களுக்கு விலை மலிவாகக் கிடைக்க வேண்டும் என்பது பற்றி அக்கறை கொள்ளாத அரசாங்கம், இந்தியப் பெட்ரோலியப் பொருட்கள் சர்வதேசச் சந்தையில் விலை மலிவாகக் கிடைக்க வேண்டும் எனக் கவலைப்படுகிறுது. மண்ணெண்ணெய்க்கும், சமையல் எரிவாயுவுக்கும் தரப்படும் "மானியத்தை' நிறுத்த வேண்டும் எனத் திருவாய் மலரும் மன்மோகன் சிங், அம்பானி அனுபவித்து வரும் ஏற்றுமதி வரிச் சலுகைகளை நிறுத்த மறுக்கிறார்.


200405 ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் அரசுக்குக் கிடைத்த மொத்த வரி வருமானம் 1,20,946 கோடி ரூபாய் என்று ஏற்கெனவே பார்த்தோம். இவ்வரி வருமானம் போக, அரசு எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி ரூபாயை இலாப ஈவாக மைய அரசிற்கு அளித்து வருகின்றன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த பொழுது, அதற்கேற்ப உள்நாட்டில் விலை குறைப்பு செய்யாமல் அடித்த கொள்ளை தனிக்கதை. இப்படியாக பெட்ரோலியத் துறை பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கும் அதேசமயம், சமையல் எரிவாயுவுக்கும், மண்ணெண்ணெய்க்கும் 200506ஆம் ஆண்டில் அரசு கொடுத்த "மானியமோ' வெறும் 2,535 கோடி ரூபாய்தான். (ஆதாரம்: தினமணி, 13.1.08, பக். 8)

பொது மக்களிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரியாகப் பறித்துக் கொண்டுவிட்டு, 2,500 கோடி ரூபாயைத் திருப்பித் தருவதை மானியம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்த 2,500 கோடி ரூபாய் திருப்பித் தரப்படுவதைக் கூட நிறுத்திவிட வேண்டும் எனக் கூறிவரும் மன்மோகன் சிங்கின் மேதமைக்கும், ஒரு வழிப்பறித் திருடனின் இரக்கமின்மைக்கும் இடையே என்ன வேறுபாடு இருந்து விட முடியும்?

2 comments:

Anonymous said...

more informative and useful news..

ahamedsaif said...

but what about the labour charges import duties and clearance charges and other charges for cleaning the crued oil you have not mentioned anything like this.........