ராமர் பாலம்: ''ஒரு பிடி மண்ணை எடுத்தால் புனிதம் கெட்டுவிடுமா?''- நீதிபதிகள் கேள்வி ~ திராவிட முஸ்லிம்

Wednesday, May 7, 2008

ராமர் பாலம்: ''ஒரு பிடி மண்ணை எடுத்தால் புனிதம் கெட்டுவிடுமா?''- நீதிபதிகள் கேள்வி


ராமர் பாலம் உள்ள இடத்திலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வேறு இடத்தில் வைத்தால் அதன் புனிதம் கெட்டு விடுமா என சேது திட்டத்துக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர்களிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

25 கிலோ மீட்டர் நீளமான ஒன்று வழிபாட்டு தலமாக இருக்க முடியுமா? என்று ராமர் பாலம் பற்றிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கூறியும் ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரியும் இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் உச்ச நீதிமன்கத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

அவர்களுடன் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் இதே கோரிக்கையுடன் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீது பல மாதங்களாக விசாரணை நடந்து வருகிறது. கடந்த
மே-1ம் தேதி இறுதிக் கட்ட விசாரணை தொடங்கியது. இதை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன், நீதிபதி ஜே.எம்.பன்சால் ஆகியோர் நேற்று(மே-6) மீண்டும் விசாரித்தனர்.

அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சோலி சொராப்ஜி, கே.பராசரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். சொராப்ஜி வாதிடுகையில்,

மக்கள் தாங்கள் கொண்டிருக்கும் மத நம்பிக்கையை தங்களது விருப்பப்படி தொடர்வதற்கும், பிரசாரம் செய்வதற்கும் உரிமை உண்டு. அவர்கள் கொண்டுள்ள எந்தவொரு நம்பிக்கையையும் தடுப்பது அரசியல் சட்டத்தின் 25-வது பிரிவை மீறுவதாகும்.

ராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதா? அது இயற்கையாக உருவானதா? என்பது இதில் முக்கியமல்ல. இந்திய சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் ராமர் பாலம் ராம பிரானால் கட்டப்பட்டது என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் வழிபடும் பகுதியை அழிக்கவோ, இடிக்கவோ முயற்சிப்பது அவர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதாகும்.

மேலும் ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா, இல்லையா என்பதை நிரூபிக்க அறிவியல் மற்றும் வரலாற்று ஆதாரங்களை ஆராய்வது போன்ற பிரச்சினைகளில் நுழைவது உச்ச நீதிமன்றத்தில் வேலையல்ல என்றார்.

இந்து முன்னணி தலைவர் ராம. கோபாலன் சார்பில் வாதிட்ட பராசரன்,

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மக்களின் மனதில் ஏற்பட்ட காயத்தின் ஆழமான வடு இன்னும் உள்ளது. அந்தக் காயம் ஆறிவிட்டாலும் கூட வடு மறையவில்லை. அதேபோல் ராமர் பாலம் இடிக்கப்பட்டாலும் அது நிரந்தர வடுவை உருவாக்கும் என்றார்.

அப்போது நீதிபதி ரவீந்திரன், நீதிபதி பன்சால் ஆகியோர் குறுக்கிட்டு, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

நாம் பூமித் தாயை வணங்குகிறோம், அதற்காக பூமியை நாம் தொடக் கூடாது என்று அர்த்தமா?. நாம் இமயமலையைக் கூட வணங்குகிறோம். அதற்காக இமயமலையைத் தொடக் கூடாது என்று அர்த்தமாகி விடுமா?.. இதேபோல் மதுராவில் உள்ள கோவர்த்தன மலையை வழிபடுகிறோம். அதற்காக கோவர்த்தன மலையில் எதையுமே செய்யக் கூடாது என்று ஆகிவிடுமா?

மக்கள் புனிதமாகக் கருதுவதால் அங்கு கட்டுமானப் பணிகள் எதையும் மேற்கொள்ளக் கூடாதா?. 25 கிலோ மீட்டர் நீளமான ஒன்று (ஆதாம் பாலம்) வழிபாட்டு தலமாக இருக்க முடியுமா?.

ராமர் பாலம் உள்ள இடத்தில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வேறு இடத்தில் வைத்தால் அதன் புனிதம் கெட்டு விடுமா? என நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் தொடுத்தனர்.

இதற்கு பதிலளித்த பராசரன், இவையெல்லாம் பதில் அளிப்பதற்கு மிகக் கடுமையான கேள்விகள் ஆகும். இந்தக் கேள்விகளுக்கு நீதிபதிகள் கூட பதில் அளிப்பது சிரமம் என்றார்.

சோலி சொராப்ஜி கூறுகையில், மலைகள், நதிகள், மரங்கள் போன்ற உதாரணங்கள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ராமர் பாலம் பற்றியே கவலை கொள்கிறோம் என்றார்.

அப்போது, நாட்டின் வளர்ச்சிப் பணிக்காக 300 மீட்டர் நீள பகுதியை இடிக்க கூடாதா? என்பதை அறிய கோர்ட்டு விரும்புகிறது என நீதிபதிகள் கேட்டதற்கு, இடிக்கக் கூடாது என்று பதில் தந்தார் சொராப்ஜி.

பின்னர் பேசிய பராசரன், 6வது வழித் தடத்தில் அமைந்துள்ள ராமர் பாலத்திற்கு எந்த சேதமும் ஏற்படுத்தாமல் சேது சமுத்திர திட்டத்தை 4வது வழித் தடத்தில் செயல்படுத்த எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றார்.

இதையே சுப்பிரமணியம் சுவாமியும் வலியுறுத்தினார்.

அரசு வழக்கறிஞர் நாரிமன்:

ஆனால், மத்திய அரசின் மூத்த தலைமை வழக்கறிஞர் நாரிமன் வாதாடுகையில்,

4-வது மற்றும் 5-வது வழித் தடத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற இயலாது. சுற்றுப்பாதையில் அமைந்துள்ள அந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு சரியான வசதியை ஏற்படுத்த முடியாது என்றார்.

இதையடுத்து விசாரணையை நீதிபதிகள் புதன்கிழமைக்கு (
மே-7) ஒத்தி வைத்தனர்.

No comments: